Monday, March 30, 2020

அவசியமற்ற பொருட்களை வாங்காமல், பணத்தை சேமித்து, முதலீடு செய்வோம்.



வெங்கடராமன் ராமசுப்ரமணியன்
(Venkataraman Ramasubramanian)
எழுத்து, தனிமனித நிதி ஆர்வலன்

உங்களுக்குத் தேவை இல்லாத பொருட்களை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், அது உணர்ச்சிவயப்பட்ட வாங்குதல் என்று பெயர். இதனை ஆங்கிலத்தில், Impulsive Purchase என்று கூறுவார்கள்.

இத்தகைய செலவுகளை தவிர்க்க நீங்கள் பின்வரும் விதிமுறைகளை கையாளலாம்;

·         ஒரு மாத காத்திருப்பு விதி; உங்களுக்கு எந்த பொருள் தேவையோ, அதனை வாங்கும் எண்ணத்தை, ஒரு மாதம் காயப் போடுங்கள். அந்த ஒரு மாதத்தில், உங்களுக்கு அந்தப் பொருள் நிஜமாகவே தேவையா என்று மனதில் மறுபரிசீலனை செய்யுங்கள். ஒரு மாதம் கழிந்த பின்னரும், அந்தப் பொருள் உங்களுக்கு தேவையாக இருந்தால், ஒரு மாதம் கழித்து வாங்குங்கள்.

·         மூன்று மாத காத்திருப்பு விதிமுன்னே குறிப்பிட்ட, இந்த ஒரு மாதத்தினை, மூன்று மாதங்களாகவும் வைத்திருந்து, ஆசைப்பட்ட பொருட்களை 1,2,3 என, அவற்றின் மீதான ஆசையின் அளவினைப் பொறுத்து, வரிசைப்படுத்தி வைப்பர். ஒவ்வொரு மாத இறுதியிலும், அந்த வரிசையினை, சரிபார்த்து, அந்தப் பொருட்களின் மீதான தேவை இன்னும் உள்ளதா என்று மறுபரிசீலனை செய்து, மறுபடியும் வரிசைப் படுத்துவர். மூன்று மாதம் கழித்து, எந்தப் பொருள் இன்னும் 1வது இடத்தில் உள்ளதோ, அந்தப் பொருள் மீது தேவை இருப்பின், அந்தப் பொருளை வாங்குவர்.
·         கையில காசு, வாயில தோசை விதி; ஒரு பொருளுக்கு பதிலாக, உங்களிடம் பணம் கொடுத்தால், நீங்கள் பொருளைத் தேர்ந்தெடுத்தால், அந்தப் பொருள் உங்களுக்கு தேவை என்று அர்த்தம். அதற்கு பதிலாக, உங்களிடம் அந்தப் பொருளுக்கு இணையான பணத்தை கொடுத்தால், அந்தப் பணத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு அந்தப் பொருள் தேவையில்லை என்று பொருள். உதாரணமாக, நீங்கள் பசியாக இருந்தால், மொறு மொறு தோசையையும், அதற்கு பதிலாக 30 ரூபாய் பணத்தையும் வைத்தால், நீங்கள் தோசையையே தேர்ந்தெடுப்பீர்கள். ஏனென்றால், தோசை உங்களுக்கு அப்போது பசியினை சமன்செய்ய தேவைப்படுகிறது. பசி ஆறிய பின்னர், அப்போது உங்களுக்கு தோசையா, பணமா என்று கேட்டால், தோசைக்கு பதிலாக பணத்தை தேர்ந்தெடுப்பீர்கள். ஏனென்றால், உங்களுக்கு அப்போது தோசைக்கான தேவையில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு, பணத்தை சேமிக்கப் பார்ப்பீர்கள்.
·         30 வினாடி விதி; கடையில் ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள். உடனே, அதை வாங்க வேண்டுமென்று, மனம் துடிக்கிறது. அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையில்லை. ஆனாலும், மனம் துடிக்கிறது. அப்போது, ஒரு 30 வினாடி, அமைதியாக இருங்கள். அந்தப் பொருள் நிஜமாகவே தேவையா ? அந்தப் பொருள் இல்லாமல் இருக்க முடியாதா ? என்று யோசித்துப் பாருங்கள். 30 வினாடிக்குள், அந்தப் பொருளின் தேவை மீதான மறு பரிசீலனை செய்யுங்கள். அந்தப் பொருள் தேவையாக இருந்தால், வாங்குங்கள். இது அதிக விலையில்லாத பொருட்களில், பண விரயத்தை தவிர்க்க உதவும்.
    
·         பசியோடு கடைக்கு செல்லாத விதி; பசியோடு கடைக்கு செல்லும் போது, பொருட்களை அவசர அவசரமாக அள்ளிக் கொண்டு வருகிறோம். அந்தப் பொருள் தேவையில்லாவிட்டால் கூட, அந்தப் பொருளை வாங்கப் பார்க்கிறோம். அந்தப் பொருளை வாங்கிக்கொண்டு, அவசரமாக வீடு திரும்புவதில் மனம் உள்ளது. எனவே, பசியோடு அங்காடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
·         பொழுதுபோக்கிற்காக அங்காடி செல்லாத விதி; பொழுதுபோக்கிற்காக அங்காடிக்கு சென்று, சாளர பொருள்வாங்குதலை(window Shopping) தவிர்க்க வேண்டும். இவ்வாறு செல்வதன் மூலம், தேவையற்ற பொருளை வாங்க நேரிடலாம்.
·         வரிசைப்பட்டியலுடன் அங்காடிக்கு செல்லும் விதி; அங்காடிக்கு செல்லும் போது, தேவையான பொருட்களை வரிசைப் படுத்திக் கொண்டு, அதனை மட்டுமே வாங்க வேண்டும். வரிசைப் பட்டியலைத் தவிர, வேறு ஏதாவது வாங்கத் தோன்றினால், அதனை வாங்காமல் திரும்பி விட வேண்டும். வரிசைப் பட்டியல் பொருட்களே நமக்கு தேவையானவை.
·         கழிவு தள்ளுபடி பகுதிக்கு செல்லாதிருக்கும் விதிஎல்லா அங்காடிகளிலும் கழிவுத் தள்ளுபடி(Clearance sale) என்று சீக்கிரம் கெடக் கூடிய பொருட்கள், கடையில் நீண்ட காலம் தங்கிவிட்ட பொருட்களை அதிக கழிவு விலையில் விற்பனைக்கு வைத்திருப்பர். அந்த பகுதிக்கு சென்றால், அவசியமில்லாத பொருட்களை வாங்க நேரிடலாம். அங்குள்ள பொருட்கள் , உங்கள் வரிசைப் பட்டியலில் இருந்தால் மட்டும் வாங்கவும்.
·         தள்ளுபடி விற்பனை நாட்களை தவிர்க்கும் விதி; ஆடித் தள்ளுபடி போன்ற தள்ளுபடி விற்பனை நாட்களில், அவசியமில்லாத போதும், பொருட்களை வாங்கி குவிக்கிறோம். அவசியமுள்ள பட்டியலில் உள்ள பொருட்களை மட்டும் வாங்க வேண்டம். அவசியமுள்ள பொருட்கள் இல்லையெனில், அந்த நாட்களில் அங்காடிக்கு செல்வதை தவிர்ப்போம்.
·         இணையவிற்பனை தளங்களுக்கு செல்லாத விதிஅமேசான் (amazon), பிலிப்கார்ட் (flipkart ) போன்ற இணையதளங்கள், இணைநிகர்(virtual) அங்காடிகளே. அங்கும் கூட, உங்களுக்கு தேவையில்லாம் செல்ல வேண்டாம். தேவை இருந்தால் மட்டும், அந்த இணைய தளங்களுக்கு சென்று, தேவையான பொருட்களை வாங்கவும்.
·         உள்ளே வெளியே விதி; ஒரு பொருள் உள்ளே வந்தால், ஒரு பொருள் வெளியே போக வேண்டும். இதனை ஆங்கிலத்தில் one in, one out, என்று கூறுவர். ஒரு பொருளுக்கு நீங்கள் ஆசைப்பட்டால், அதற்கு மாறாக, அதைப் போலவே, அல்லது அதற்கு இணையாக ஒரு பொருளை வெளியே அனுப்பி விட்டு, புதிய பொருளை உள்ளே அனுமதியுங்கள். இதன் மூலம், இருக்கும் பொருளைக் கொண்டே வாழ முடியுமா என்று சிந்திக்க முடியும். உதாரணமாக, நீங்கள் புதிதாக ஒரு கைகடிகாரம் வாங்க ஆசைப்பட்டால், இருக்கும் கைகடிகாரத்தை விற்று விட்டு, புதிதாக வாங்குங்கள். இப்போது, இருக்கும் கைகடிகாரத்தையே வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றும்.
·         மன உளைச்சலில் அங்காடி செல்லாத விதி; மன உளைச்சலில் அங்காடி செல்லும் போது, மன உளைச்சலிலிருந்து விடுபட வேண்டுமென்று எண்ணி, மனதில் தெளிவாக சிந்திக்க இயலாத சமயத்தில், தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்கலாம். எனவே, மன உளைச்சல் சமயங்களில் அங்காடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
·         நிதி திட்டமிடல்(Budget) விதி : நிதி திட்டமிடலில் ஒவ்வொரு செலவுக்கும் நிதியை மாத ஆரம்பத்தில் ஒதுக்கி, அதற்குள்ளாக செலவினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் அதிகமாக சஞ்சிகைகள் வாங்கும் பழக்கம் இருந்தால், சஞ்சிகை நிதி திட்டமிடலை தாண்டி செலவு செய்யாமலிருக்கும் போது, அவசியமான சஞ்சிகையையே வாங்குவீர்கள்.
·         பேரங்காடிக்கு(mall) செல்வதை தவிர்க்கும் விதி; பேரங்காடிகளில் பல்வேறு அங்காடிகள் பல்வேறு பொருட்களை வைத்திருப்பார்கள். அங்கு செல்லும் போது, வரிசைப்பட்டியலுடன் மட்டுமே செல்லவும். அவசியமற்ற பொருட்களை வாங்குவதை அது தவிர்க்க உதவும்.
·         பணத்தை உழைப்புடன் ஒப்பிடும் விதி; உங்களது மாதசம்பளம் ரூபாய். 16000 என்று கணக்கில் கொள்வோம். நீங்கள் மாதம் உழைக்கும் மணி நேரம் ; ஒரு நாள் = 8 மணி நேரம். ஒரு வாரம் = 5 x 8 = 40 மணி நேரம். ஒரு மாதம். 40 x 4 = 160 மணி நேரம். எனவே, உங்கள் ஒரு மணி நேர உழைப்பானது , 16000 / 160 = 100 ரூபாய்க்கு சமமானது. எனவே, நீங்கள் ஒரு பொருளை பணமாக பார்க்காமல், உங்களது உழைப்பாக பாருங்கள். உதாரணமாக, 1000 ரூபாய் சட்டை, 10 மணி நேர உழைப்பு. அந்த சட்டைக்கான பணத்தை நீங்கள் மறுபடி மீட்க, 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அவ்வளவு தூரம், அந்தப் பொருள் தேவையா என்று எண்ணிப் பாருங்கள்.
·         முதலீட்டு விதி; ஒரு பொருளை வாங்குவதற்கு பதிலாக, அந்தப் பணத்தை முதலீடு செய்தால் எவ்வளவு பயன் என்று எண்ணிப் பார்ப்பது. உதாரணமாக, ரூபாய். 1000 ரூபாய் அவசியமற்ற சட்டைக்கு பதிலாக, அந்த பணத்தை, உங்களது 18 வயதில், வருடம் 12% சராசரியாத் தரும், பங்கு சந்தை குறியீட்டு பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால், உங்களது 60 வயது ஓய்வின் போது, எவ்வளவு தூரம் பெருகியிருக்குமென்று பார்க்கலாம். அதாவது, அந்த 1000 ரூபாய், 42 வருடத்தில் கிட்டத்தட்ட ரூபாய். 1,50,000 ஆகியிருக்கும். எனவே, இந்தப் பொருள் அவசியம்தானா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இதற்கு பதிலாக, முதலீடு செய்யலாமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்

·         குறிக்கோள் விதிஇந்தப் பொருள் எனது வாழ்நாள் குறிக்கோளினை அடைய எந்த விதத்தில் உதவும் என்று எண்ணிப் பார்ப்பது. உங்களது வாழ்நாள் குறிக்கோள் என்பது, நல்ல ஒரு ஆசிரியாக உருவாவது. நல்ல ஒரு தொழிலதிபராக மாறுவது என்று எதுவாகவும் இருக்கலாம். வாங்கும் பொருள் எந்த வித த்தில், உங்களது வாழ்க்கை லட்சியத்திற்கு உதவும் என்று எண்ணி, அவசியமற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்கலாம்.
·         பின்விளைவு விதிஅவசியமற்ற அந்தப் பொருளை வாங்கியபின்னர் விளையும் பின்விளைவுகளை எண்ணிப் பார்ப்பது. பின்விளைவுகள் பிரச்சனை தருபவையாக இருந்தால், அந்தப் பொருளை வாங்குவதை தவிர்க்கலாம். உதாரணமாக, மிகவும் விலையுயர்ந்த தங்க கடிகாரத்தை வாங்கினால், எங்கு சென்றாலும், படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்கு பதில், சாதாரண கைகடிகாரம், நேரத்தை காட்டுவது மட்டுமன்றி , பணத்தை மிச்சம் பிடிக்கும்.
·         வேதாத்திரி மகரிஷியின் ஆசை சீரமைத்தல் விதிவேதாத்திரி மகரிஷி ஆசை தோன்றும் போது, பின்வரும் கேள்விகளை எழுப்புமாறு கூறுகிறார்.
o    தேவையால் விளைந்த ஆசையா ?
o    ஆசையினை அடைய என்னிடம் மன வளம், பொருள் வளம், உடல் வளம் உள்ளதா ?
o    ஆசையை அடைந்தால் பின்வளைவு நன்மையா ? தீமையா ?
    இவ்வாறு கேள்வி எழுப்பி, தேவையான ஆசையாக இருந்து, அதனை அடைய மன வளம், பொருள் வளம்,           உடல் வளம் இருந்து, பின்விளைவும் நன்மையானால் மட்டுமே , அந்த ஆசையை செயல்படுத்த                             வேண்டுமென்கிறார்.

இந்தப் பயிற்சியானது, வேதாத்திரி மகிரிஷி தற்சோதனை பயிற்சிகளில் ஒன்று.

·         மூன்று ஆர்(R) விதி; (Reduce - Reuse - Recycle). குறைவான பொருட்களை வைத்து, இருக்கும் பொருட்களை பல வழிகளில் உபயோகித்து, ஏற்கனவே உபயோகப்படுத்திய பொருட்களை மறுசுழற்சி செய்து, சுற்றுசூழல் காக்கும் விதி. எனவே, எந்தப் பொருள் வாங்கும் முன்பும், இருக்கும் பொருட்களை கொண்டே சமாளிக்க முடியுமா என்று எண்ணுவது. ஏற்கனவே, பயன்படுத்திய பொருட்களை வாங்குவதன் மூலம், பணத்தினை, சுற்றுச்சூழலை காப்பது.

அவசியமற்ற பொருட்களை வாங்காமல், பணத்தை சேமித்து,
முதலீடு செய்வோம்.



No comments:

Post a Comment