இவ்வினா "நான்கு வர்ணக் கொள்கைகளுக்கு எதிரானதா திருக்குறள்? சான்றுகள் உண்டா?" என்று இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஐயமே வேண்டாம்! திருக்குறள் நான்கு வர்ணக் கொள்கைகளுக்கு முழுவதும் எதிரான நூல்தான் ஐயா!
இப்படி ஐயங்கள் வருவதற்குக் காரணம், திருக்குறள் கருத்துக்களை நேர்மறையாகக் கூறும் முறையையே பெரும்பாலும் கடைப்பிடிப்பதுதான். இந்த சந்துகளில் புகுந்துதான், ஆரியர்கள் "பாருங்கோ! இதைத்தானே சொல்றது எங்கள் மனுதர்மமும் சநாதன நால்வர்ண தர்மமும்" என்று கூசாமல் பொய்யுரை சொல்வார்கள்.
பரிமேலழகர் தொடங்கி, "Tirukkural - an Abridgement of Sastras" என்ற நூலை, தப்பும், தவறுமான ஆங்கிலத்தில் எழுதிய, தொல்லியல் அறிஞர் என்ற போர்வையில் ஆடும் ஆரியப் பிராமணர் திருவாளர் நாகசாமிவரை, ஆரியப் பொய்யர்கள் கூட்டத்தின் ஆட்டம் நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!
இப்போது நேரடியாக, செய்திக்கு வருவோம்!
நான்கு வர்ணக் கொள்கை என்ன? மனிதர்களின் கர்ம பலன்களுக்கு ஏற்ப வரும் புண்ணிய-பாவங்களைப் பொறுத்து, விராட் புருஷனின் (/ பிரமனின் / விஷ்ணுவின் )
- தலையில் பிறந்தவர்கள் பிராமணர்கள்;
- தோள்களில் பிறந்தவர்கள் சத்திரியர்கள்;
- இடுப்பில் பிறந்தவர்கள் வைசியர்கள்;
- காலில் பிறந்தவர்கள் சூத்திரர்கள்;
மிகவும் தாழ்ந்த, நான்காம் தர சூத்திரர்கள், மிகவும் உயர்ந்த பிராமணர்களுக்கு அடிமை சேவகம் செய்ய படைக்கப்பட்டவன்; செய்தால், புண்ணியம். அடுத்தபடியாக, தாழ்ந்தவன், வைசியன், பிறகு, சத்திரியன்.
இதன்படி, விராட் புருஷன் / பிரமன் / விஷ்ணு என்று படைத்தவனின் திருவடி என்னும் 'கால்களில் பிறப்பது' என்பதே மிகவும் கீழ்த்தரமானது என்று சொல்வதிலிருந்து, ஆரியர்களின் சநாதன நான்கு வர்ணக்கொள்கை தொடங்குகிறது!
இந்தத் தொடக்கத்துக்கே ஓங்கி நெத்தியடியாக, கடவுள் வாழ்த்திலேயே ஆப்பு அடித்துவிட்டார் திருவள்ளுவர்!
கடவுள் வாழ்த்துப் பத்துப் பாடல்களில், ஏழு பாடல்களில் இறைவனின் திருவடிகளே (கால்கள்) மிகவும் சிறப்பித்துப் பாடப்பட்டன! திருவடிகளான கால்களைச் சென்று அடைவதே பிறவிப்பயன், வீடுபேறு, மோட்சம் எல்லாம் என்று உரக்கச் சொல்கிறது திருக்குறள்.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின் – (திருக்குறள் 2)
காலை வணங்காமல், தலையில் பிறந்தோம் என்ற தலைக்கனம் கொண்டவர்கள் என்னதான் முக்கி முக்கி வேதங்கள் ஓதிக் கற்றாலும், வரும் பயன் ஒன்றுமில்லை என்ற உட்பொருளில்,
"அனைத்தையும் அறிந்த முற்றறிவுடைய வாலறிவனாம் இறைவனின் திருவடிகளை-தாளை(காலை) வணங்காவிட்டால், கற்றதனால் வரும் பயன் ஒன்றும் இல்லை" என்கிறது இக்குறள்.
நீண்ட ஆயுளுக்காகப் பெரும் பொருட்செலவில் ஆயுஷ்ஹோமம் தேவர்களை வேண்டிச் செய்ய வேண்டியதில்லை! இறைவனின் திருவடிகள்-கால்களைச் சேர்ந்தாலே போதும்! நீண்ட ஆயுள் பெற முடியும் என்று நெத்தியடியாகச் சொல்கிறது அடுத்த குறள்!
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (திருக்குறள் 3)
இறைவனின் மாணடி - பெருமைமிக்க திருவடிகளை(கால்களை)ச் சேர்ந்தவர்கள் இப்பூவுலகில், நீடு(நீண்ட காலம்) வாழ்வார்கள் என்கிறது இக்குறள்.
பெரும் பொருள் செலவிட்டுத் துன்பங்கள் நீங்க, தேவர்களை வேண்டி யாகங்கள் செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருவடிகளைப் (கால்கள்) பற்றிக்கொண்டால் போதும், எந்தத் துன்பமும் அணுகாது என்று அடுத்த செய்தியைச் சொல்கிறது இக்குறள்.
வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க்கு
யாண்டு மிடும்பை மில (திருக்குறள் 4)
வேண்டுதல்-வேண்டாமை(விருப்பு-வெறுப்பு) இல்லாத இறைவனின் திருவடிகளை(கால்களை)ச் சேர்ந்தார்க்கு எந்தத் துன்பமும் இல்லை.
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது. (திருக்குறள் 7)
தனக்கு ஒப்பில்லாத இறைவனின் தாள் - திருவடிகளை(கால்களை)ச் சேர்ந்தவர்களைத் தவிர, ஏனையோரின் மனக்கவலையை மாற்றுவது அரிது(கடினம்).
“அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது - (திருக்குறள் (8)
அறவாழி அந்தணன் இறைவனின் தாள் - திருவடிகளை(கால்களை)ச் சேர்ந்தவர்கள் தவிர, மற்றவர்கள் பிறவிக் கடலை நீந்துவது அரிது(கடினம்).
“கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (திருக்குறள் 9)
எண்குணத்தான் இறைவனின் தாள் - திருவடிகளை(கால்களை) வணங்காதவனின், குறிக்கோள் இல்லாத 5-புலன்களுடன் கூடிய 5-பொறிகள் கொண்ட உடல் எதற்கும் பயனற்றது!
“பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார். (திருக்குறள் 10)
இறைவனின் தாள் - திருவடிகளை(கால்களை)ச் சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்த மாட்டார்கள்; ஏனையோர் நீந்தி, இறைவன் திருவடிகளை அடைவர்.
நால்வருணக் கொள்கை சொன்ன படைப்புக் கொள்கையில், படைத்தவனின் கால்களில் பிறந்ததாக இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட கால்களை - திருவடிகளைச் சிறப்பித்தே கடவுள் வாழ்த்தில் ஏழு பாடல்களை அமைத்துவிட்டார் திருவள்ளுவர்.
- திருக்குறளுக்குப் பிறகு எழுந்த பக்தி இயக்கம், இறைவனின் திருவடிப் பெருமையைப் பேசியே சைவ சமயத்தையும், திருமாலிய சமயத்தையும் தமிழகத்தில் மீட்டுவாக்கம் செய்தது.
- வீடுபேறு என்னும் 'முக்தி' என்பது 'இறைவனின் திருவடிகள்' மட்டுமே என்பதையே உரக்கப் பேசினார்கள்!
- 'இறைவனின் திருவடிப் பெருமைகளை' அவர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளிலும், திருநாலாயிரப் பாசுரங்களிலும் பக்திமழையாகப் பொழிந்திருக்கிறார்கள்!
- சைவ, திருமாலிய, குருமார்களான நாயன்மார்களும், ஆழ்வார்களும், நால்வருணக் கொள்கைகள் சொல்லும் சாதியையும், கோத்திரங்களையும், குலங்களையும், தீண்டாமையையும், கடுமையாகக் கண்டித்தார்கள்.
திருமூல தேவ நாயனார்,
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"
என்று மனிதகுலத்தின் ஒருமைப்பாட்டினையும் ஓர்இறைக் கோட்பாட்டினையும் உணர்த்தியுள்ளார்.
மனுதர்மம் "பிராமணன் முட்டாளாக இருந்தாலும் பிராமணனே! ஏனைய வருண ஜாதியார் அவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்" என்கிறது.
ஆனால், திருமூலரோ,
''சத்தியம் இன்றித் தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வு இன்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே''' - திருமந்திரம் - 231
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வு இன்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே''' - திருமந்திரம் - 231
என்று தீர்க்கமாக பிராமணர் தகுதிப்பாட்டை வரையறுக்கிறார்.
இன்னும் ஒரு படி மேலேபோய்,
நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.திருமந்திரம் - 230
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.திருமந்திரம் - 230
நூலும் முடியும் வைத்துக் கொண்டால் பிரம்மமோ ( பிரம்மம் அறிந்தவன் ஆவானா?) நூலாக இருப்பது வெறும் பஞ்சு; நுட்பமான குடுமி வெறும் 'தலைமயிரால்' ஆனது.
பூணூலாவது வேதாந்தம் என்னும் நூலறிவைக் குறிக்கும் அடையாளம்! அந்நூலறிவால் உணர்ந்த ஞானத்தைப் பெற்றவனே நுண்சிகை (குடுமி) வைத்துக்கொள்ளத் தகுதியுடையவன்.
அவ்வாறு வேதாந்தநூலை அறிந்து ஞானம் பெற்றவர் என்பதை அவரது பேச்சிலே அறியலாம்" என்று நெத்தியடியாக, மனுதர்ம நூல் சூத்திரத்தைப் புறம் தள்ளுகிறார் திருமூலர்.
பூணூலும், குடுமியும் வைத்துகொண்டு, தன்னை அலங்கரித்துக் கொள்வதால் ஒருவன் தகுதி பெற முடியாது. ஞானமும், அறிவும் பெற்றவனே அந்தணன் என்கிறார் திருமூலர்.
அப்பர் பெருமான், திருக்கோயிலில் காணப்பட்ட சாதிகொடுமையைக் கண்டித்தார். திருக்கன்றாப்பூர் பதிகத்தில்,
'சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளுமாற் பேறரே!'
என்று மனக் கொதிப்புடன் சாடினார்.
மாணிக்கவாசகரோ, மனிதர்கள் செய்யும் சாதி, குலம், வருணம் என்ற கொடுமைகளைத் தானே செய்ததாகக் கொண்டு,
'சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு'
என்று கசிந்து உருகுகிறார்.
நால்வருண சனாதனிகளின் போலிவழிபாட்டைக் கண்டித்த நாவுக்கரசர்பெருமான்!
பொருளற்ற சடங்குகள், போலி வழிபாடு, நடிப்பு, பக்தி முதலியவற்றை சைவத்திருமுறை நாயன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிவனிடம் அன்புகொள்ளுதல் இல்லாமல் புனித ஆறுகளிலும் கடல் தீர்த்தங்களிலும் முழுகிவிட்டால் பாவம் கழுவப்பெறும் என்ற போலிநம்பிக்கையைச் சாடினார் திருநாவுக்கரசர். பாபநாசத் திருக்குறுந் தொகையில்,
''கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்குதண் குமரித்துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே'' என்றார்.
சிவனும் அன்பும் ஒன்றுதான் என்று அருளினார் திருமூலர்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது அரும் அறிந்த பின்
அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே! - திருமந்திரம்.
ஆண்டாள் திருப்பாவையில், `செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்', என்ற தொடர் வருகிறது.
இத்தொடரில் இடம் பெறும் `தீக்குறளை என்ற சொல் தீமைபயக்கும் புறம்பேசுதலைக் குறிக்குமென்பதே உண்மைப் பொருள். திருமாலியர்களும் இதே பொருளைத்தான் கூறுகிறார்கள்.
'திருக்குறளைத் 'தீக்குறள்' என்ற 'தெய்வத்தின் குரல்!'
"திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில் தான் `தீக்குறள்' என்று ஆண்டாள் குறிப்பிட்டுள்ளார்" என்ற குதர்க்கமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் ஸ்மார்த்தகுரு காஞ்சி சங்கராச்சாரியார்.
குமுதம் நாளிதழில் இச்செய்தி வைத்தும், கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குமுதம் நாளிதழ் மன்னிப்புக் கேட்டது.
தலையில் பிறந்த ஆச்சாரியார், 'கால்' பெருமை பேசிய திருக்குறளை, 'தீக்குறள்' என்றதற்கு வருத்தம் தெரிவிக்கவே இல்லை.
நால்வருணக் கொள்கை சொல்லும் தலையில் பிறந்த பிராமணன் உயர்ந்தவன், கால்களில் பிறந்த சூத்திரன் தாழ்ந்தவன் என்பதற்கு முற்றிலும் எதிராக எழுதப்பட்ட திருக்குறள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - (திருக்குறள்:972)
செய்தொழில் வேற்றுமை யான். - (திருக்குறள்:972)
பிறப்பினால் அனைத்து உயிர்களும் சமம். இவ்வுலகில் சம உரிமையுடன், தனித் தன்மையுடன், சுயமரியாதையுடன் வாழ அனைத்து உயிர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், ஒவ்வொரு உயிரும் செய்யும் தொழில்களால் அவற்றின் சிறப்பான பண்புகள் ஒன்றுபோல் இருக்காது என்கிறது இக்குறள்.
இங்கு, தலை-கால் புரியாமல் உளறிய நால்வருணப் படைப்புக் கோட்பாட்டை மட்டும் எதிர்த்து நெத்தியடியாக எழுத வில்லை.
நன்றாக, உற்றுக் கவனியுங்கள் - 'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது ஓரறிவு உயிர் தாவரத்திலிருந்து, ஆறறிவு மனிதன் வரை அனைவருக்கும் பிறப்பினால் சம உரிமை உண்டு என்கிறது குறள்.
ஓரறிவு கொண்ட மரத்தின் சிறப்பு, உயிர்வாழ உயிர்வளி-Oxygen தந்து, மனிதர்களும், ஏனைய உயிர்களும் வெளியிடும் நச்சுப்பொருளான கரியமில வாயுவை உறிஞ்சி, சூரிய ஒளியுடன் சேர்த்து, தனக்கான உணவையும், ஏனைய உயிர்களுக்கான உணவையும் தருகிறது.
மரம் செய்யும் வேலையை மனிதன் செய்ய இயலாது. மனிதனுக்கு வாழ்வுரிமை இருப்பதுபோல், மரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களின் வாழ்வுரிமையையும் மனிதன் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பால் தரும் கால்நடைகளின் சிறப்பு என்ன என்று கேட்டால்,
"புல்லு கொடுத்தால் பாலு கொடுக்கும்
உன்னாலே முடியாது தம்பீ! பாதிப் புள்ள
பொறக்குதையா பசுவோட பாலையே நம்பி!" என்பது பதில்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் பொன்னான குறள் பகுதி
- விலங்குகள், தாவரங்கள், கடல்வாழ் உயிர்கள் போன்ற அனைத்தும் 'Right to Lead a Dignified Life in this World' - என்ற சுயமரியாதையுடன் இப்புவியில் வாழும் உரிமையைப் பெற்றவை
என்பதையே மனிதனுக்கு அறிவுறுத்துகிறது.
குறளின் இரண்டாவது பகுதியான
"சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்பது
- ஒவ்வொரு உயிரினமும் இப்புவியில் செய்யும் தொழில் எவ்வாறு தனித்தன்மை கொண்ட சிறப்பு உடையது என்பதையும்,
- அவை செய்யும் ஒவ்வொரு செயலும் ஏனைய உயிர்களுக்கு எவ்வாறு நலமளிக்கிறது என்பதையும்,
- உயிர்கள் ஒன்றை ஒன்று எவ்வாறு சார்ந்து வாழ்கின்றன என்பதையும் நமக்குப் புரிய வைக்கின்றது.
இதைத்தான், ஆங்கிலத்தில் "Bio-Diversity" என்று பீற்றிக் கொள்கிறோம்; அதேவேளையில், அவற்றிக்கு ஊறு விளைவிக்கிறோம்.
இக்குறளை மறந்துவிட்டு, "உலகம் பிறந்தது எனக்காக; ஓடும் நதிகளும் எனக்காக", என்று பாடிக்கொண்டு, தீவினைகள் செய்தால், உலகம் இருக்கும்; மனிதர்கள் வாழ இயலாத ஏனைய கோள்களைப்போல், பாழ்வெளியாகும் என்பதை மறக்க வேண்டாம்!
வள்ளுவர் செய் திருக்குறளை வழுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி - மனோன்மணியம் சுந்தரனார்.
வள்ளுவரின் திருக்குறளை பிழையில்லாமல் நன்கு உணர்ந்தவர்கள், ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று ஏற்றத்தாழ்வு செய்யும் ஆரிய நால்வருண மனுதருமத்தை மனத்தால்கூட நினைக்க மாட்டார்கள் என்று துணிவுடன் கூறுகிறார் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய மனோன்மணியம் சுந்தரனார்.
மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் நோக்கி எச்சில் துப்பினால், துப்பியவன் முகத்திலேயே விழுவதுபோல, 'சூத்திரன்' என்று சக மனிதனை அவமதிக்கும் கருமத்தைச் செய்பவன், பலபிறவிகளைத் தரும் கொடுவினைகளைச் செய்வதால், கடுநரகத்தில் உழல்வான் என்பது திண்ணம்!
மனுதர்மம், மனிதனை, மனிதன் அடிமையாக்கும் கொடுமையை 'தர்மம்', 'கர்மவினை', 'சனாதனம்' என்று சாயம்பூசிச் சட்டமாக்குகிறது.
பிராமணர்களுடைய, பிராமணர்களால், பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட தர்ம சாஸ்திரங்கள்
- பிராமணர்களின் தன்னல வாழ்வுக்காக ஏனைய மனிதர்களைப் பிறப்பினால் அடிமையாக்கி,
- அவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ, EXPLOIT செய்ய
- ஒரு உளவியல் சார்ந்த சமூக அமைப்பைக் கட்டமைத்து இருக்கிறது.
அதன் சுவர்களில் 'சம்பூகவதம்' போன்ற கீறல்கள் விழும்போதெல்லாம், கீதையில் 'சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம்' என்று பகவானின் பெயரால் அடிமை உளவியல் சூத்திரங்கள் உருவாக்கப்பட்டு, சம்பூகர்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
உண்மையை விளக்கும் நபர்கள் தோன்றும் போதெல்லாம், அவர்களின் மத அடையாளங்கள் அல்லது வேறு ஏதாவது உள்நோக்கங்கள் கற்பித்து, அவர்களின் கருத்தை நீர்த்துப் போகச் செய்யும் சூழ்ச்சியை எப்போதும் போல, இப்போதும் செய்கிறார்கள். அவ்வளவுதான்.
மனிதகுலத்துக்கே எதிரான கர்மா, கர்மபலன் என்று பல கருமாந்திரங்களையும் சொல்லும் நால்வருணக் கொள்கை கொண்ட சனாத, மனுதர்ம, வேத மதத்துக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டது திருக்குறள். இன்னும் இது தொடர்பாக விரிவாக விவாதிப்போம். இப்போது விடை பெறுவோம்.
——————
திரு. இராமலிங்கம் சுப்பிரமணியன் அவர்கள் கொடுத்த பின்னூட்டக் கேள்வியும், ஐயமும், அதற்கு, நான் அறிந்த பதிலும், விளக்கமும் வாசகர் பலருக்கும் பயன்படும் என்று தோன்றியதால் இங்கு பகிர்கிறேன்:
கேள்வி: "அறவாழி அந்தணன் இறைவனின் தாள்" அற வழியில் செல்பவர்கள் அனைவரும் அந்தணர்களே. அப்படி அறவழியில் செல்லவில்லை என்றால் அவர்கள் பின்பற்றும் அரைகுறை அறவழியால் பல வருணங்களை பெறுகிறார்கள்.கர்மா, கர்ம பலன் என்பது எல்லாம் கருமாந்திரம் என்பது திருவள்ளுவருக்கு தெரியுமா?இவ்வளவு அறிவோடு எழுதி இருக்கும் தாங்கள் அந்தணர் எதிர்ப்பால், அந்தணர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இதுவரை தாங்கள் அறிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
எனது பதிலும் விளக்கமும்: அந்தணன் என்போன் அறவோன் - மற்றெல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் - என்றார் வள்ளுவப் பெருமான் வரையறை கொடுத்த 'அந்தணன்' என்ற சொல்லுக்கு விளக்கம் அறிவேன்.
பிறப்பின் வழியே, 'நான் விராட் புருஷனின் தலையில் பிறந்த பிராமணன்' என்று சொல்பவர் 'அந்தணன் இல்லை' என்பதையும் உறுதியாக அறிவேன்.
ஏனென்றால், அவர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் வரைந்த கோட்பாட்டை மீறுபவர்.
வருணக்கோட்பாடு என்று சொல்லி, தன் சக மனிதரைச் சூத்திரன் என்று பழித்து, அவனை அடிமையாக்கும் ஒரு விலங்கு நிலையை அடைவதால், அத்தகையவர் மனிதர் என்ற தகுதியையே இழக்கிறார்.
நான் அறிந்த வள்ளுவன் கூறும் 'அந்தணன்' என்ற சொல்லுக்குப் பொருளை இப்போது உங்களுக்கு அறிவிக்கிறேன்.
வள்ளுவர் சொல்லும் 'அறவோர்' என்னும் தகுதியுடன் ஆரியர் குலத்தில் பிறந்த பரிதிமாற்கலைஞர், வீர சைவ சமயத்தின் நிறுவனர் பசவண்ணர், தமிழ் சைவ சமய முதற் குரவர் திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் வணக்கத்துக்குரிய அந்தணர்கள்.
மற்றும், இத்தகு மேலோரைப் போல் சிந்திக்கும் ஆரிய குலத்தில் பிறந்த நல்லோர் சிலரும் கோராவில் இயங்குகின்றனர். இவர்கள் அனைவரும் வணக்கத்துக்கு உரிய அந்தணர்கள்.
உண்மையைச் சொல்வதற்குப் பெயர் 'அந்தணர் எதிர்ப்பு' என்று நீங்கள் நினைத்தால், நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. நான் மனிதர்களை நேசிப்பவன். எவரையும் எதிர்ப்பவன் அல்லன்